மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்று இயேசு கூறுகிறார். கடவுளைக் காண வேண்டுமானால் தூய மனம் தேவை என்பதே இதன் பொருள். கடவுளைக் காண்பதற்கே தூய்மையான உள்ளம் தேவை என்றால், அவரைத் தம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த கன்னி மரியாள் எவ்வளவு தூயவராக இருந்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. அடிமையின் வடிவை ஏற்ற இறைமகனுக்கு தாயாகுமாறு கடவுளுக்கு தம்மையே அடிமையாக அர்ப்பணித்த கன்னி மரியாள், மிகத் தூயவரான கடவுளைக் கருத்தாங்குமாறு மிகத் தூயவராக பிறக்க வேண்டுமென கடவுள் விரும்பினார். "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இயேசுவை" (எபிரேயர் 1:3) கருத்தாங்கிப் பெற்றெடுக்குமாறு மரியாள் தம் தாயின் வயிற்றிலேயே பாவம் இல்லாமல் உற்பவித்தார்.

முதல் ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியதால் பாவம் உலகில் நுழைந்தது. புதிய ஏவாளான மரியாள் கடவுளின் விருப்பத்துக்கு கீழ்ப்படிந்ததால் மீட்பு உலகிற்கு வந்தது; மரியாளின் வழியாக இறைமகனும் மீட்பருமான இயேசு இவ்வுலகில் பிறந்தார். கடவுளின் விருப்பத்துக்கு முரணாக செயல்படும் மனித இயல்பே தொடக்கப் பாவம் அல்லது ஜென்மப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தம் தாயின் வயிற்றில் உருவாகும் பொழுதே, இந்த தொடக்கப் பாவத்தின் கரையுடனே பிறக்கிறார். ஆனால் கடவுளின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் என்பதால், அவரது திட்டம் நிறைவேறுவதற்காகவே மரியாள் இவ்வுலகில் அமல உற்பவியாகத் தோன்றினார். "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்" (லூக்கா 1:49) என்ற சொற்கள், தொடக்கப் பாவத்தின் கறை மரியாளை மாசுபடுத்த முடியவில்லை என்பதையே பறைசாற்றுகின்றன.

"தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் மரியாளை அழைத்த கடவுள், தம் வல்லமையால் இவ்வுலகின் தீய நாட்டங்களில் இருந்து அவரை விலக்கி காத்து, தம் இறைத்தன்மையில் பங்குபெறச் செய்தார்." (2 பேதுரு 1:3-4) இதன் காரணமாக, "மிகவும் ஆசிபெற்ற கன்னி மரியாள் உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, எல்லாம் வல்ல கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனிதகுல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பெருபலங்களினாலும், தொடக்கப் பாவத்தின் அனைத்து கரைகளில் இருந்தும் பாதுகாக்கப்பட்டார்" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 491) என்று திருச்சபை பறைசாற்றுகிறது. மீட்பரின் தாயாகுமாறு வரலாற் றின் தொடக்கத்திலேயே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவேதான் வானதூதர் மரியாளை, "அருள் நிறைந்த மரியே வாழ்க!" என வாழ்த்தினார்.