இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவியான மரியாளை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

'"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே' (மத்தேயு 1:22) இறைமகன் இயேசு மனிதர் ஆனார். கடவுளும் மீட்பருமானவரின் தாயாகுமாறு தனிப்பட்ட அருள் வரங்களாலும், அலுவல்களாலும் அணி செய்யப்பட்டவராக மரியாள் திகழ்கிறார். இறைவனின் திட்டத்தால், கன்னியாக இருந்து கொண்டே தாயாகும் வரம் பெற்றவர் மரியாள். "கணவரையே அறியாத அவர் பரிசுத்த ஆவி நிழலிடத் தம் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் இறைத் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார்." (திருச்சபை எண். 63) எனவே. மரியாளின் தன்னுரிமையுள்ள ஒத்துழைப்பின் வழியாகவே "கடவுள் மனிதராகி நம்மிடையே குடிகொண்டார்" (யோவான் 1:14) என்பது தெளிவாகிறது.

"நற்செய்திகளில், 'இயேசுவின் தாய்' என்று அழைக்கப்படும் மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் முன்பே, அவரை 'ஆண்டவரின் தாய்' என தூய ஆவியின் தூண்டுதலால் எலிசபெத் அழைத்தார். உண்மையில், தூய ஆவியால் கன்னி மரியாளின் வயிற்றில் மனிதராக கருவான அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், இறைத்தந்தையின் நித்திய மகனுமானவர், உடல் சார்ந்த முறையில் உண்மையிலேயே மரியாளின் மகன் ஆனார். எனவே, திருச்சபை மரியாளை உண்மையாகவே 'கடவுளின் தாய்' (Theotokos) என்று அறிக்கையிடுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 495) கண்ணுக்குப் புலப்படாதவரும், உலகமே கொள்ள முடியாதவருமான கடவுளை, தம் வயிற்றில் சுமந்து பெற்ற மரியாளை 'கடவுளின் தாய்' என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.

"திருச்சபை முதலில் தோன்றிய காலத்தில் இருந்தே, இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையாலே கன்னி மரியாளின் திருவயிற்றில் கருவானார் என்பதை அறிக்கையிடுகிறது; 'மனித வித்தின்றி பரிசுத்த ஆவியின் வல்லமையால்' இயேசு கருவான நிகழ்வை உடல் சார்ந்த நிலையில் உறுதிப்படுத்துகிறது. கன்னி கருத்தாங்குதலை, இறைமகன் நம்மைப் போன்று மனிதரானதை உறுதிப்படுத்தும் அடையாளமாக திருச்சபைத் தந்தையர் காண்கின்றனர். எனவே அந்தியோக்கு புனித இக்னேசியு, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்: பரிசுத்த கன்னியே, நீர் உறுதியாக நமது ஆண்டவரைக் கருத்தாங்கினீர்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 496) "மனிதரான நித்திய இறைமகனும், கடவுளுமானவரின் தாயாக இருப்பதால், மரியாள் உண்மையிலேயே 'கடவுளின் தாய்' தான்!" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 509)