சிலுவையில் தொங்கியபடி சேசுநாதர் சுவாமி திருவுளம்பற்றிய ஏழு வாக்கியங்கள்

(விசேஷமாக பெரிய வெள்ளியன்று சொல்லத்தக்கது.)

நமது திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்து நாதர் தமது மரணத் தறுவாயில் சொன்ன ஏழு வாக்கியங்களும், நாம் மோட்சம் செல்வதற்காக அவர் ஏற்படுத்தியுள்ள ஏழு தேவத்திரவிய அனுமானங் களைக் குறிக்கின்றன.  இரத்தம் சிந்தியபடி கர்த்தர் உரைத்த இந்த வாக்கியங்களை சற்று சிரமம் எடுத்து சிந்திப்போம். உருக்கமுடன் தியானிப்போம்.  கவனமுடன் செயல்படுத்துவோம்.


முதல் வாக்கியம்

“பிதாவே! இவர்களை மன்னித்தருளும். ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” (லூக். 23:34)

ஆண்டவரை உலகம் அறிந்து கொள்ள வில்லை.  அவருடையவர்கள் கூட அவரை ஏற்றுக் கொள்ளவில்லை (அரு. 1:10‡11). ஆகவே அவரை உபாதைப்படுத்தி சிலுவையில் வதைக்கிற யூதர் களுடைய பாவம் எவ்வளவு பெரியதென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆயினும் தமது பாடுகளின் இரட்சணியப் பேறுபலன்களை அவர்களுக்கும் அடைந்து கொடுக்கவேண்டும் என ஆண்டவர் விரும்புகிறார்.  தம்மைப் பகைத்து சிலுவையில் அறைந்து கொலைசெய்கிற அந்தக் கொடிய விரோதிகளையும் அவர் மனமார நேசிக் கிறார் பாருங்கள்.  அவர் போதித்ததை அவரே செய்து காட்டுகிறார்!  “உங்கள் சத்துராதிகளைச் சிநேகியுங்கள்.  உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” (மத். 5:44).  இத்தலைசிறந்த கிறீஸ்தவ தத்துவத்தை நமதாண்டவர் கொலை யுண்டவாறே நிரூபித்துக் காட்டுகிறார். தமது இரத் தத்தினாலும், தேவ சிநேகத்தினாலும் தம்மைக் கொல்பவர்களுக்கு உயிர் கொடுக்க விரும்பி, அவர்களுக்காகப் பிதாவை மன்றாடுகிறார். அவர்கள் தங்கள் அநீதத்தை உணர்ந்து மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. ஆயினும் அவர்களை மன்னிக்கும்படி மன்றாடுகிறார்.  “பிதாவே இவர் களை மன்னித்தருளும்.  ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.” 

ஆ கிறீஸ்தவர்களே! நாம் பரலோக மந்திரத்தில் என்ன சொல்கிறோம்?  “எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.” இப்படி ஜெபிக்கிற நாம் நம்மைப் பகைக்கிறவர்களைப் பகைக்கவும், நம்மைப் பழிக்கிறவர்களைப் பழி வாங்கவும் நினைக்கிறோம். ஆனால் நமதாண்டவர் தம் பகைவர்களுக்கு மோட்சம் கொடுக்கவும், தம்மைக் கொல்லுகிறவர்களுக்கு நித்திய ஜீவியம் கொடுக்கவும் மன்றாடுகிறார்!

மன்னிப்புக் கேட்காமலிருக்கும்போதே மன்னிப்பு வழங்கும் ஞானஸ்நானம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தைக் குறிப்பிடும் இம்முதல் வாக்கியத்தினால் நமது இரட்சகர் பாவத்தில் பிறக்கும் மனிதர்களுக்கெல்லாம் இலவசமாக மன்னிப்பு அளிக்கத் தயாராயிருப் பதைக் காட்டுகிறார்.

ஜென்மப் பாவத்தினால் மனிதர்கள் இழந்துபோன தேவசிநேக உறவையும், தெய்வீக உயிரையும் நாம் ஞானஸ்நானத்தில் பெறுகிறோ மென்றால், அதாவது ஜென்மப் பாவமும், கர்மப் பாவமும் போக்கப்பட்டு, நாம் ஞானஸ்நானத்தில் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாகப் பிறக்கிறோம் என்றால், கிறீஸ்துநாதருடைய ஞான சரீரத்தின் உறுப்பாக மறுபிறப்பு அடைந்த இந்த நித்திய ஜீவிய வரமானது, சிலுவையில் பாடுபட்டு  இரத்தம் சிந்திய நிலையில் சேசுநாதர் சுவாமி நமக்காகப் பிதாவிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடியதன் பேறுபலனாலேயே நமக்குக் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.  எனவே ஞானஸ்நானம் என்னும் முதல் தேவ திரவிய அனுமானத்திற்கு வல்லமையும், உயிரும் கொடுப்பதன் குறிப்பாகவே ஆண்டவர் தமது முதலாவது வாக்கியத்தைத் திருவுளம்பற்றினார் என்பது தெளிவாகிறது.

இவ்வாக்கியத்தின் வல்லமையால், சகல மனிதருக்கும் இலவசமாக மன்னிப்பளிக்கத் தயாராயிருக்கும் நம்முடைய நாதரைப் பார்த்து, சிலுவையடியில் நிற்கும் மாதாவிடம் மன்றாடி பகைவர்களுக்கும் மன்னிப்பளித்து, நன்மை செய்யும் வரத்தையும், நமது ஞானஸ்நான வார்த் தைப்பாட்டில் நிலைபெறும் வரத்தையும் நமக்குத் தரும்படி கேட்போமாக.


இரண்டாவது வாக்கியம்

“இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாயயன்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (லூக். 23:43)

நமதாண்டவருடைய இந்த வாக்கியம் அவரது வலப்பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த நல்ல கள்ளனுக்கு நம்பிக்கை உறுதியளிக்கிறது. தீஸ்மாஸ் என்னும் பெயருடைய இவன் வாழ்நாள் முழுவதும் கள்ளனாயிருந்தாலும் தன்னோடு ஒரு குற்றவாளியாக சிலுவையில் அறையப்பட் டிருக்கும் சேசுநாதர் சுவாமியை உண்மையாகவே சர்வேசுரன் எனக் கண்டுகொள்கிறான்.

இடதுபுறக் கள்ளன் ஆண்டவரைப் பழித்து பகைத்து, நிந்தித்து, “நீர் தேவனானால் உம்மையும், எங்ளையும் இச்சிலுவையிலிருந்து இரட்சியும்.  இல்லையயன்றால் உம்மைத் தேவனென்று சொல் லிக் கொண்டதேன்?” எனப் பரிகாசம் செய்த போது,  வலதுபுறக் கள்ளன் அவனைக் கடிந்து, “நீயும் இந்த ஆக்கினைத் தீர்ப்புக்கு உள்ளாகி யிருந்தும் சர்வேசுரனுக்குப் பயப்படுகிறதில் லையோ?  நமக்கு இது நியாயந்தான்.  நம்முடைய செய்கைகளுக்குத் தக்க சம்பாவனையைப் பெறு கிறோம்.  இவரோ ஒரு பொல்லாப்பும் செய்தவ ரல்ல” என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி, “சுவாமி, தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணினான் (லூக்.23:40-43).  ஆண்டவர் அதைக் கேட்டு அவன் மேல் மகா கருணை கொண்டு, அவனுடைய சகல பாவங்களையும், அவைகளுக்குரிய ஆக்கினைகளையும் பொறுத்து, “இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாயயன்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று இரண்டாம் வாக்கியம் திருவுளம்பற்றுகிறார்.

இது ஒரு விசேஷ சலுகை!  உத்தரிக்கிற ஸ்தலம் செல்லாமலே மோட்சத்திற்குச் செல்லும் வரப்பிரசாத சலுகை. இச்சலுகையை அவன் அடைந்து கொள்ள இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவன் கிறீஸ்துநாதருக்கு  சாட்சியம் கூறி, வேதசாட்சியானான்.  இன்னொன்று சிலுவை யடியில் நின்ற மாதாவிடம் தயவு வேண்டி அவன் மன்றாடியிருந்தான்.  மாதாவும் அவனுக்காக சேசு நாதரிடம் பரிந்துபேசி, இந்தச் சலுகை வரத்தை அடையச் செய்தார்கள்.  (உத்தரியம் அணிபவர் களுக்கு மாதா வாக்களித்துள்ள சனிக்கிழமைச் சலுகை.)

நாமனைவரும் இந்தக் கள்ளனைப்போலவே இருக்கிறோம். ஆயினும் பாவங்கள் பதினாயிரம், குற்றங்குறைகள் ஏராளம் நம்மிடம் உண்டு! ஆயினும் நாம் சேசுநாதரை சர்வேசுரன் என்று அறிந்து, அவரை நேசித்து, உத்தம விதமாய் ஒழுகு வதற்கான தைரியமும், மன உறுதியும் உண்டாக, (இவையே உறுதிப்பூசுதலின் பலன்கள்) சேசு நாதரின் பாடுகளும், இரத்தமும் நம்மை ஞான ஜீவியத்தில் உறுதிப்படுத்துகின்றன.  இந்த உறுதிப் படுத்தும் வரப்பிரசாதமே உறுதிப்பூசுதல் என்னும் தேவத்திரவிய அனுமானத்தில் நமக்கு வழங்கப் படுகிறது. எனவே சிலுவையில் ஆண்டவர் உயிர் விடுமுன் உரைத்த இரண்டாவது வாக்கியம், உறுதிப் பூசுதல் என்னும் தேவ திரவிய அனுமானத்தைக் குறிக்கும் வாக்கியம் என்பது தெளிவாகிறது.


மூன்றாவது வாக்கியம்

“ஸ்திரீயே, இதோ உம் மகன்... இதோ உன் தாய்” (அரு.19:26,27) 

சிலுவையடியில் நின்று கொண்டிருந்த தேவமாதா அந்நேரத்தில் தம் திருமகனுடைய வாயிலிருந்து தமக்கு ஆறுதலாக ஏதாவது வார்த்தை வெளிவரும் என்று எண்ணி ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.  அப்படியே ஆண்டவரும் தமது தாயாருக்கு ஆறுதலாக மட்டுமல்ல, தமது பலியின் பலனை மனிதர்களுக்கெல்லாம் பகிர்ந் தளிக்கும் தாயாக மாதாவை அறிவிக்க விரும்பி னார்.  ஆகவே ஆண்டவர் மாதாவைப் பார்த்து, “ஸ்திரீயே” என்று கூப்பிட்டு, அருளப்பர் என்னும் சீ­னைக் காண்பித்து, “இதோ உமது மகன்” என்றும், மறுபடியும் அருளப்பரைப் பார்த்து, மாதாவைக் காண்பித்து, “இதோ உன்னுடைய தாயார்” என்றும், மூன்றாம் வாக்கியத்தைத் திருவுளம்பற்றினார்.

இந்த வாக்கியத்தால் நமதாண்டவர் தமக்குப் பதிலாக தம் மாதாவுக்கு அருளப்பரை மகனாகவும், இவ்வுலகத்தில் ஆதரவாகவும் கொடுத்ததோடு இத்திருத்தாயாரை சகல மனித ருக்கும் தாயாகவும், நம்மை மாதாவுக்குப் பிள்ளை களாகவும் கொடுத்தார்.

இங்கே மாதாவுக்கும், நமக்குமிடையே உள்ள தாய்‡சேய் உறவை ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். தாய் என்றால் பிள்ளைக்கு உயிர் அளித்து, உணவூட்டி வளர்ப்பவள். சேய் என்றால் தாயின் சாயலாய், தாயைப் போல் பிள்ளையாய் வளர்வது. சேசுநாதர் சுவாமி சிலுவையில் தமது உயிரையும், சரீரத்தையும், இரத்தத்தையும் நமக்காகவே கையளித்தார்.  ஜீவிய அப்பம் நானே (அரு.6:48) என்று சேசுநாதர் தமது கல்வாரிப் பலியில் கையளித்த திருச்சரீரத்தையும், இரத்தத் தையும் தேவ நற்கருணை என்னும் திவ்விய உணவாக நமக்குப் பரிமாறி ஊட்டி வளர்க்கும் தாயாக மாதாவை அந்நேரத்தில் ஏற்படுத்தச் சித்த மானார்.  அது மட்டுமல்ல, மாதாவும் சேசுநாத ருக்குத் தமது சொந்த இரத்தத்திலிருந்து உயிரும் உடலும் தந்து, கிறீஸ்துநாதர் என்னும் சாயலைக் கொடுத்து வளர்த்தது போல, நமக்கும் தேவ நற்கருணை மூலம் தமது மாசற்ற இரத்தத்தின் வல்லமையை ஈந்து, கிறீஸ்து அவர்கள் என்னும் சாயலில் வளர்த்து வரும் அன்னையாகத் திகழும் விசே­ அலுவலை உணர்த்துவதே இந்த  மூன்றாம் வாக்கியத்தின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

இங்கே ஆண்டவர் மாதாவைத் “தாயே” என்று அழைப்பதால் வரும் இயல்பான ஆறுதலைக் கூட தியாகம் செய்யவும், அதே வேளையில் தம் தாயின் இருதயத்தில் தாய்க்குரிய உணர்ச்சி வேகத் தால் அவர்களது துயரம் அதிகரித்து விடாமலிருக் கவும் ஸ்திரீயே என்று அழைத்துப் பேசுகிறார்.


நான்காவது வாக்கியம்

“தாகமாயிருக்கிறேன்” (அரு. 19:28)

அந்நேரத்தில் அரிமத்தியா சூசை என்பவரும், நிக்கோதேமுவும் வேகமாக வந்து தங்களுக்கு வழிவிடக் கேட்டார்கள். “என்ன அவசரம்?” எனப் படைவீரர்கள் தடுத்து நிறுத்த, “நாங்கள் சேசுநாத ருடைய நண்பர்கள்.  அவரிடம் செல்ல வேண்டும்” என்றார்கள்.  அதைக் கேட்டுக் கோபமடைந்த பெரிய குருக்கள், “அந்தக் குற்றவாளியின் நண்பர்கள் என்று கூறிக் கொள்ளத் துணியும் நீங்கள் யார்?” என்று கேட்டார்கள்.  இந்தக் கேள்விக்கு “யூத மகா சங்கத்தின் புகழ் பெற்ற உறுப்பினர், அரிமத்தியா சூசை நான்.  இவர் யூதர் களின் தலைவர் நிக்கோதேமு” என்றார் சூசை.  அதற்கு அவர்கள், “குற்றவாளி ஒருவனுக்குத் துணை செல்பவர்கள் குற்றவாளிகளே” என்றார்கள்.  உடனே வந்தது பதில்: “கொலைகாரர்களுக்குத் துணை செல்பவர்கள் கொலையாளிகளே ஆவர்” என்று!

சிலுவையில் சேசுநாதர் ஏற்கெனவே மரித்தவர் போல் ஆனார். அவரது சரீரம் அசை வின்றி சிலுவையில் படாமல் மூன்று ஆணிகளில் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. ஏனென்றால் ஆண்டவர் பட்ட வாதைகளால் இளைப்பும், தவிப்பும் அதிகரித்தது.  சரீரம் முழுவதும் காந்த லாகி அகோர வேதனைக்குள்ளாக்கியது. அந்நேரத்தில் தொண்டையும், நாவும் வறண்டு போக, தம் இருதயத்தில் ஏற்பட்ட ஒருவகை ஏக்கம்! அதாவது தம்முடைய மரணத்தின் பேறு பலன்களை அநேகர் அடைய வேண்டும் என்ற ஆசைத் தாகம்!  நமதாண்டவருக்குத் தண்ணீர்த் தாகம் ஒருபுறம் இருந்தாலும் அவருடைய ஆத்தும இரட்சணியத் தாகமே இப்போது அதிகமாக அவரை வாதித்தது.  அதாவது இத்தனை பாடுகள், இரத்தம் சிந்துதல், இவை யாவும் ஏராளம் பேருக்கு வீணாய்ப் போகிறதே என்ற ஏக்கத்தை அவரால் தாங்கக் கூடவில்லை.  எனவே ஆண்டவர் மிக வருத்தத்துடன் கூறுகிறார், “தாகமாயிருக்கிறேன்” என்று.

இவ்விதம் அவர் வசனித்த நான்காவது வாக்கியத்தினால், ஆன்மாக்கள் தங்கள் பாவங் களுக்காகப் பச்சாத்தாபப்பட்டு மனந்திரும்பு வதையே அவர் வெகுவாக ஆசீத்தார்.  பாவசங் கீர்த்தனம் என்னும் தேவதிரவிய அனுமானத்தை அலட்சியம் செய்யும் ஆன்மாக்களுக்காக அவர் அனுபவித்த தவிப்புதான் அவரது உண்மையான தாகம்!

ஆ கிறீஸ்தவர்களே! உங்களுக்கு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வதற்குத் தேவையான மனஸ்தாப வரம் வேண்டுமா?  வேண்டாமா?  நமதாண்டவருக்கு இருக்கிற தாகம், ஆவல் உங்களுக்கு இருக்கிறதா?  அந்த வரத்தைப் பெற ஒரு வழியுண்டு. பாவிகளுக்கும் சேசுநாதருக்கும் இடையே நின்று மனஸ்தாப வரம் பெற உதவிடும் தேவ தாயிடம் பேசுவதே அந்த வழி. அப்படிச் சென்றால் மனஸ்தாப வரம் நிச்சயம் பெறலாம்.


ஐந்தாவது வாக்கியம்

“என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்” (மாற்கு. 15:34)

சேசுநாதர் பூங்காவனத்தில் அவஸ்தைப் பட்டபோது, பூலோகத்தில் அவருக்கு எவ்வித ஆறுதலும், ஆதரவும் இல்லை என உணர்ந்தார். அதே மரண அவஸ்தை இப்போது சிலுவையில் அவரைக் கவ்விக்கொள்கிறது.  தேவ சிநேகத்திற்காக வேதசாட்சியம் அனுபவிக்கிற புனிதர்களுக்குத் தேவ உதவியினால் மிகுந்த தேற்றரவு கிடைக்கும்.  ஆனால் சிலுவையில் தாங்க முடியாத வேதனை யினால் புழுப்போல் துடித்துக்கொண்டிருக்கும் நமதாண்டவருக்குத் தமது பிதாவினாலும் யதொரு ஆறுதலும் வராமல் போயிற்று.  இப்படி அவர் தமது அநாதி பிதாவினாலும் கைவிடப் பட்டதுதான் அவரது மரண அவஸ்தைக்கு முதற் காரணமாக இருந்தது. இதுவே நமதாண்டவரை அதிகமாகப் பாதித்தது. இதுவே அவரது கடைசி மரண அவஸ்தை!  இந்த அவஸ்தையின் அகோரத் தினால் நமது நேச ஆண்டவரின் கடைசித் துளி இரத்தமும் வெளிப்படுகின்றது!  எங்கும் இருள் சூழ்ந்து விட்டது!  எங்கும் அமைதி நிலை. அனைவரும் அச்சத்தோடு அவரைப் பார்த்து நிற்க, ஆண்டவர் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்ன ஐந்தாம் வாக்கியம்: “ஏலோயி, ஏலோயி, லாம்மா சபக்தானி!  அதாவது, என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?” 

மனிதர்களின் பாவத்தால் பரலோகம் அடைக்கப்பட்டு விட்டதே!  பிதாவின் இரக்கப் பார்வை கூட தடுக்கப்பட்டு விட்டதே என்ற பரிதவிப்பினால் ஆண்டவர் எழுப்பிய ஆறுதலற்ற கதறல் ஒலி அது!

ஆம். நமது மரண அவஸ்தையின்போது நாம் ஆறுதலைக் கண்டடைவதற்காக, அவர் யாதொரு ஆறுதலுமின்றிக் கதறுகிறார் பாருங்கள்! அவஸ்தைப்பூசுதல் என்னும் தேவத்திரவிய அனுமானத்தினால் மரண சமயத்தில் நமது ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் ஆறுதலைத் தரும் பொருட்டு, ஆண்டவர் தம் மரண சமயத்தில் அவஸ்தைப்படுகிறார்!  தாம் ஆறுதல் அற்று, நாம்  ஆறுதல் அடைய! நாம் அனைவரும்நல்ல மரண வரம் அடைவதற்காக நமதாண்டவர் இந்த ஐந்தாம் வாக்கியத்தை உரைத்துள்ளார்.

கிறீஸ்தவர்களே!  நமது துயர சம்பவங் களின் போது, அல்லது வேதசாட்சியம் அனுபவிக் கும்போது சற்றுப் பொறுமையாயிருந்து, தேவ சித்தத்தை ஏற்றுக் கொண்டால் ஏற்படும் தெய்வீக ஆறுதலைக் கண்டடைய நாம் கற்றுக் கொள்ளும்படியாகவே பிதாவாகிய சர்வேசுரன் தமது நேச குமாரனின் துக்கத்தைப் பார்க்க வில்லை!


ஆறாவது வாக்கியம்

“எல்லாம் முடிந்தது” (அரு. 19:30)

பிரதம குருவின் தாய்!  தேவதாய் - குருக்களின் தாயாக இருக்கிறார்கள்.  இத்தாயிடம் சேர்க்கப்பட்டுள்ள பாடுகளின் பேறுபலன்கள் எல்லாம் இனிமேல் மனித ஆன்மாக்களுக்குக் குருத்துவத்தால் வழங்கப்படும்!  இவ்விதமாக சேசு நாதர் சுவாமி ஆயராகவும், போதகராகவும், குருவாகவும் இருந்து இவ்வுலகில் செய்து முடித்த ஆன்மீக அலுவலை உலக முடிவு வரை சகல ஆன்மாக்களுக்கும் கொண்டு செல்லத் தேவையான எல்லாம் முடிந்து விட்டது! எல்லாம் நிறைவேறி விட்டது!  பிதாவினால் நியமிக்கப்பட்ட இத்திருச் சித்தத்தைப் பரிபூரணமாக நிறை வேற்றிய நமதாண்டவர் இனி அமைதியாக உயிர் விடலாம்.  இவ்விதம் குருத்துவம் என்னும் தேவ திரவிய அனுமானமே இரட்சணிய அலுவல்.  இப்போது ஆண்டவர் தம் தாயைப் பார்த்து மெதுவாக, “அம்மா, அம்மா!” என்று தீனக் குரலில் கூப்பிடுகிறார்.  மாதாவுக்கு மட்டும் அது கேட் கிறது. நீங்களும் என்னைக் கைநெகிழ்ந்து விட்டீர் களா? என்பது போல் அது மாதாவுக்கு ஒலிக் கிறது! மாதாவும் சேசுவைப் பார்க்கிறார்கள்.  அப்பார்வையில், இல்லை மகனே, இதோ நான் இங்கே இருக்கிறேன்.  நானும் உம்மோடு பலியாக விரும்புகிறேன் என்னும் பதில் மொழி ஒலிக் கிறது!

ஆண்டவரின் குரல் தொடர்கிறது.  ஆம்.  எனது இரட்சணியப் பணி, அதாவது என் குருத்துவ அலுவல் இதோ நிறைவுபெறுகிறது.  இவ்வலுவலைத் தொடரப் போகும் திருச் சபையின் குருக்களுக்கும் தாயாக நீங்கள் உலகில் இருக்க வேண்டும் எனக் கூறுவது போல நமதாண்டவர், “எல்லாம் முடிந்தது” என்று ஆறாம் வாக்கியம் திருவுளம்பற்றுகிறார்.

இவ்வாக்கியத்திற்குச் சரியான அர்த்தம் என்னவெனில், மனிதர்கள் ஈடேற்றமடைவதற்குத் தேவையான சகல வரப்பிரசாதப் பேறுபலன்களும் தமது திவ்ய இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்டு, மாதா என்னும் பொக்கி­ சாலையில் சேமிக்கப் பட்டு விட்டன.  இரட்சணியம் முற்றுப்பெற்று விட்டது.  தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி விட்டன என்பதாகும்.

“வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக் குட்டிகள் இவைகளின் இரத்தத்தோடல்ல, தமது சொந்த இரத்தத்தோடே பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, நித்திய இரட்சணியத்தை சேசுநாதர் நமக்குப் பெறுவித்தார்” (எபி. 9:12).

நித்திய குருவாகிய சேசுநாதர் கல்வாரியில் நிறைவு செய்த இக்குருத்துவ அலுவல், இனி கத்தோலிக்கத் திருச்சபையில் குருத்துவம்   என்னும் தேவதிரவிய அனுமானத்தினால் தொடரும்!


ஏழாவது வாக்கியம்

“பிதாவே! என் ஆத்துமத்தை உமது கரங்களிலே ஒப்புக்கொடுக்கிறேன்” (லூக். 23:43)

கடைசியாக நமதாண்டவர் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்!  இதோ அவர் பிதாவோடு மீண்டும் ஒன்றிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது!  அதாவது, அவரது மரணம்தான் மகிமை யின் வாசல். மனித இரட்சணியத்திற்காக மனிதனாய்ப் பிறந்து, மனிதப் பிறவிகளுக்குரிய சகல வேதனை, துன்பம், நோக்காடுகள், பசி, தாகம், உஷ்ணம், குளிர், கடைசியாக இப்போது மரணம் ஆகிய அனைத்திற்கும் தம்மைக் கையளித்து, தலைசாய்க்கவும் இடமில்லாத ஒரு பரிதாப வாழ்வு வாழ்ந்த பிறகு, இதோ தமது பிதாவோடு மீண்டும் இணைந்து தமது தேவ சுபாவத்தின் மகிமையோடு, மகிமைப்படுத்தப்பட விருக்கும் தமது மனித சரீரத்தின் மகிமையையும்  அவர் மீண்டும் பெற இருக்கிறார்! எனவே பரம பிதாவிடம் தமது ஆத்துமத்தை ஒன்றிக்கும்படி, சேசுநாதர் சுவாமி தெளிவான குரலில், “பிதாவே, என் ஆத்துமத்தை உமது கரங்களிலே ஒப்புக் கொடுக்கிறேன்” என்று ஏழாம் வாக்கியம் திருவுளம்பற்றுகிறார்.

அப்போது நமது ஆண்டவர் கண்களை மூடி, திருச்சிரசு சாய்ந்து கவிழ, சகலருக்கும் சீவன் கொடுக்கிற அவர் உயிர் விடுகிறார்.  மரித்தவர் களைச் சீவிக்கச் செய்கிற ஆண்டவர் மரிக்கிறார்.

இவ்வுலக அநித்திய வாழ்வு முடிந்ததும், மனிதர்கள் நித்திய ஜீவியத்தில் சர்வேசுரனோடு கொள்ள வேண்டிய நித்திய ஒன்றிப்புதான் உண்மை யான வாழ்வு. அந்த நித்திய நிச்சயமான வாழ்வின் வாசலைத்தான் சேசுநாதர் தமது பாடுகளாலும், மரணத்தாலும் திறக்கிறார்.  அந்த உண்மையான பரலோக வாழ்வின் வாசல்தான் நமது நல்ல மரணம்!  இம்மரண வாசல் வழியாக நமது மனுUகம் கடவுளின் தெய்வீகத்தோடு இணைந்து பேரின்பம் அனுபவிப்பதையே மெய்விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானம் முன் உணர்த்து கிறது. மேலும் கிறீஸ்தவர்களின் விவாகமானது கிறீஸ்துநாதருக்கும், திருச்சபைக்கும் உண்டான ஞான ஐக்கியத்துக்கு அடையாளமாயிருக்கிறது என்றும், அதன் காரணமாக, இது பெரிய தேவ திரவிய அனுமானமாயிருக்கிறது என்றும் அர்ச்சியசிஷ்ட சின்னப்பர் கூறுகிறார் (எபே. 5:25‡33).

உள்ளபடி, கிறீஸ்தவர்களுடைய விவாக மானது கிறீஸ்துநாதருக்கும், திருச்சபைக்கும் உண் டான ஞான ஐக்கியம் மட்டுமல்ல, சேசுநாதருக்கு ஞான சரீர உறுப்புகளையும், திருச்சபைக்கு மக்களையும் அது உற்பத்தி செய்து கொடுக்கிறது.

ஆகவே, இவ்வுலகத் திருமண வாழ்வு முற்றிலும் பரலோக நோக்கு உடையதாக இருக்க வேண்டும்.  அதெப்படியயனில், சரீர பாவ இன்பத்தை நோக்கமாகக் கொண்டிராமல், மோட்ச இராச்சியத்திற்குப் பிரஜைகளை உருவாக்குகிற புனித குடும்பங்களாக, அதாவது, கறைதிரை இவை முதலியவைகள் ஒன்றுமில் லாமல், அர்ச்சிக்கப்பட்டதும், மாசற்றதுமான மகிமை உள்ள சபையாக அது துலங்க வேண்டும் (எபே.5:27).  அப்படி நம் குடும்பங்கள் இருக்கின் றனவா?  ஆண்டவரே, நீரே எங்களை இரட்சித் திருக்கிறீர்!  ஆகவே நீர் உமது ஆத்துமத்தை நித்திய பிதாவின் கரங்களிலே ஒப்புக்கொடுத்ததைப் பார்த்து எங்களை உம்மோடு நித்திய மோட்சப் பேரின்பத்துக்குப் பாத்திரவான்களாக்கிக் கொள்ளும் சுவாமி.